பாக்.: குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை
பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். 
மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
அவர்தான் குரானை எரித்திருக்க வேண்டும் எனக் கருதிய கிராமவாசிகள் ஆத்திரம் மேலோங்க அவரைத் தாக்கி பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

உயிரோடு எரித்துக் கொலை
ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இருநூறு பேர் அடங்கிய பெரிய கும்பல் ஒன்று காவல்நிலையத்துக்குள் தடாலடியாக நுழைந்து அந்நபரை வெளியில் இழுத்துப் போட்டு அவரைக் தீவைத்துக் கொளுத்தியிருந்தனர்.
இத்தாக்குதல் தொடர்பில் முப்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக இருந்தார்கள் என்பதற்காக பொலிஸ்காரர்கள் ஏழு பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதநிந்தனை என்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனாலும் மிகச் சிலருக்கே அங்கு இக்குற்றச்சாட்டுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளும் பாகிஸ்தானில் அவ்வப்போது எழுவதுண்டு.
source:BBC






Comment Form under post in blogger/blogspot